×

ரூ.4,620 கோடி நிதி மோசடி வழக்கு ஹிஜாவு நிறுவன நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியும் 4வது குற்றவாளியுமான சவுந்தரராஜன் ஜாமீன் கோரி நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.தனசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுந்தரராஜன் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 96 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகாரை நிரூபிக்கும் வகையில் காவல்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டுஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளனர். 16,500 நபர்கள் இதுவரை புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிசெல்லவும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம் எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜராகி, சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில் சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.4,620 கோடி நிதி மோசடி வழக்கு ஹிஜாவு நிறுவன நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijavu ,Chennai Special Court ,CHENNAI ,Soundararajan ,Hijavu Financial Company ,Dinakaran ,
× RELATED எல்.எஸ்.டி எனும் ஸ்டாம்ப் வடிவிலான...